அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சி நிறைவு விழா விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “10 ஆயிரம் மாணவர்கள் சொற்குவை இணையதளத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை தமிழில் மூன்று லட்சத்து 96 ஆயிரம் சொற்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் புது சொற்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் ஒரேநாளில் 7 இடங்களில் காணொலி காட்சி வாயிலாகத் திறந்துவைக்க இருக்கிறார். 29 தொல்லியல் வல்லுநர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடுதான். மேலும் பழைய ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும்.
பயிர்க்கடன்... அடுத்து கல்விக்கடனா?
12 ஆயிரம் கோடிக்கு மேல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, விவசாயிகள் கஷ்டத்தினை பார்த்து இதனை முதலமைச்சர் செய்துள்ளார். மாணவர்கள் கல்விக்கடன் என்பது எந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படுமோ, அப்போது எடுப்பார்கள்.
கல்விக்கடன் என்பது மாணவர்களைப் பொறுத்தவரை அது வங்கிக்கடன். இதனை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். மாநில அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும்.
ஸ்டாலின் அரசியல்
அரசியல் காரணத்திற்காக ஸ்டாலின் எங்கு சென்றாலும் அரசியல்தான் செய்வார். ஆனால் முதலமைச்சர் அரசியல் செய்யவில்லை. 12 ஆயிரம் கோடி ரூபாயை அரசு தள்ளுபடி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிக்கு அந்தப் பணத்தினை அரசு செலுத்தும். திமுக செய்ததைவிட இது பலமடங்கு அதிகம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘எழுவர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பார்’ - அமைச்சர் பாண்டியராஜன்