சென்னை: சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கோவை ஈஷா மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ மரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் கடந்த ஜன.11 முதல் 18 வரை நடைபெற்ற யோகா பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த 19 ஆம் தேதி அவரது கணவர் ஆலந்துறை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.
பின்னர் துலக்கங்காடு என்ற தோட்டத்தின் அருகில் இருக்கின்ற கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில், மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரினால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சுபஸ்ரீயின் உடல் அவரது கணவர் பழனி குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம், செம்மேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவர் ஆகியோரின் கைபேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்" என தெரிவித்தார்.