சென்னை அமைந்தகரையில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக போட்டியிட மு.க.ஸ்டாலின், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், கோபாலபுரம் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். எனவே, 2ஆவது முறையாக திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்