தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ”குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகத் தலைமைச் செயலர் தலைமையில் இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைக் கூற வேண்டும்.
இச்சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
மு.க. ஸ்டாலின் கேள்விக்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்து பேசுகையில், ”மாநில அரசின் அதிகார வரம்புக்குள் எடுத்துவரப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அரசின் நிலைப்பாடுகளையும் இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் 49 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் இஸ்லாமியர்கள் இந்தக் கூட்டத்தில் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
இதற்கு முன்பாக நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆவணங்கள் கேட்டதில்லை. தற்போதுள்ள மக்கள் தொகை பதிவேட்டில் ஆவணங்கள் கேட்கப் போவதில்லை என்பதை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்...