சென்னை: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான விமானி இயந்திரக் கோளாறைக் கண்டறிந்து துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 164 போ் உயிர் தப்பினர்.
கத்தாா் தலைநகா் தோகாவிலிருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் இன்று இரவு சென்றுகொண்டிருந்தது. இதில், 158 பயணிகள், ஆறு விமான ஊழியா்கள் உள்பட 164 போ் இருந்தனா்.
இந்த விமானம் சென்னை வான்வெளியை கடந்து நடுவானில் சென்றபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவுசெய்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார்.
அவரது அழைப்பை ஏற்ற சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கான அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தபின் அனுமதியளித்தனர்.
இதனையடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. உடனடியாகப் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, சா்வதேச விமான நிலைய பயணிகள் ஓய்வுகூடத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
தரையிறங்கிய விமானத்தைப் பழுதுபார்த்த பொறியாளர்கள் இதனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இலங்கையிலிருந்து வரவிருக்கும் மாற்று விமானத்தில் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 164 போ் உயிா் தப்பினா்.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி