சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களின் பேப்பர், பேனா, ஆணையத்தால் கொடுக்கப்பட்டுள்ள 17 சி ஃபார்ம் உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்து செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இது நல்ல நோக்கமாக இருந்தாலும், அதில் உள்ள சில சிரமங்களை எடுத்துக் கூறினோம். அதை ஏற்று 17 சி ஃபார்ம், பென்சிலை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார்கள். இதற்கு ஆணையத்துக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனை அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். அதேபோல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒவ்வொரு மேஜையிலும் எவ்வளவு வாக்கு பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அளிக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.
மேலும் விவிபேட் எண்ணிக்கைக்கு அரசியல் கட்சிகளின் தனி முகவர்களையும் அனுமதிக்க ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோல் அரவக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதை சுட்டிக்காட்டினோம்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதனையும் எடுத்துக் கூறினோம். அதனை ஏற்று பெரிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் ஆணையம் திமுக வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.