தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள், மசூதி, கிறிஸ்துவ தேவாலயங்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபாட்டிற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலக நாடுகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும்; இந்தச் சூழலில் இந்திய அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளும் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளித்து, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் தங்களுடைய வீடுகளிலேயே பொழுதைக் கழித்து வருவதாகவும்; இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எனவே இறைவனை வணங்கும்போது, மன உளைச்சல் நீங்கி மனம் அமைதி பெறும் என்பது இயல்பான உண்மை எனவும்; ஆகவே தமிழ்நாடு அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தி, வரும் இந்தச் சூழலில் ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ண மாவட்டங்களில் இருக்கும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளோடு வழிபாடு நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!