கரோனா தொற்று காரணமாக வழக்கமான ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதலாக ஏழு சிறப்பு ரயில்கள், தென் மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கும் சென்றுவரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மற்றொரு சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். அதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறு நாள் காலை 4.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இவை அனைத்தும் நாள்தோறும் இயக்கப்படும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் சிறப்பு தேஜாஸ் ரயில், திருச்சி, கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இது வியாழக்கிழமை தவிர வாரத்தின் மற்ற ஆறு நாள்கள் இயக்கப்படும்.
மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கொல்லம் மாவட்டத்திற்கு சிறப்பு ரயிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் ஆழப்புழாவுக்கு அதிவிரைவு சிறப்பு ரயிலும் இயக்கப்படும். காரைக்காலில் இருந்து நாள்தோறும் கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது