உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, திமுக மகளிரணி சாா்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், கனிமொழி எம்.பி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேரணியில் பங்கேற்றவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்ததைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழ்நாடு காவல் துறை. உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது! தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா?அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்! என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், ”திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க ஏதுவாக மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் சம்பவத்தில் நீதி வேண்டி கனிமொழி தலைமையில் திமுக பேரணி!