சென்னை: சென்னையின் மக்கள் தொகை பெருக்கம், நிர்வாக கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு, தாம்பரம், ஆவடி ஆகிய 2 புறநகர் காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அலுவலர்களாக காவல்துறை கூடுதல் தலைவர்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து அந்தந்த காவல் ஆணையரகங்கள் அமைப்பதற்குண்டான இடம், காவல் மாவட்டங்கள், காவல் நிலையங்களை பிரிக்கும் பணியானதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று (ஜன.1) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
இந்நிலையில் இந்த காவல் ஆணையரகங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை கூடுதல் தலைவர்களையே, காவல் ஆணையர்களாக நியமித்து உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையராக ரவி, ஆவடி காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அலுவலர்களுக்கு சரக காவல்துறை தலைவர்களாக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் விரைவில் சரக காவல்துறை தலைவர்களாக பதவி உயர்வு பெற்று பணியைத் தொடங்குவார்கள் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிரடிப்படை நிலை என்ன?- சென்னை உயர் நீதிமன்றம்