சென்னை: மதுரை டவுன் ஹால் என அழைக்கப்படும் விக்டோரியா எட்வர்டு ஹால் சங்கத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சங்கத்தை நிர்வகிக்கவும், முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்கவும், மதுரை வடக்கு மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத்தை நியமித்துக் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு காரணமாகச் சிறப்பு அதிகாரியால் பொறுப்பேற்க முடியவில்லை எனவும், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பான உத்தரவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரை அதிமுக மாநாடு: தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
மேலும், உடனடியாக பொறுப்பேற்று முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தி செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யச் சிறப்பு அதிகாரிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாது சங்கக் கட்டிடத்தின் சாவியையும், பதிவேடுகள், வங்கி பாஸ்புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் முதலியவற்றைச் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் எனச் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் நூலகத்துக்கு உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிறப்பு அதிகாரியின் விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சென்னை டூ பெங்களூரு இனி 30 நிமிடத்தில் செல்லலாம்.. சென்னை ஐஐடியின் 'ஹைப்பர்லூப்' திட்டம்!