சென்னை: உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், "பல்வேறு பாடத் திட்டங்களில் பட்டயக் கல்வியை முடித்து, நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாள் மாணவர்கள் அக்டோபர் 2019 மற்றும் ஏப்ரல் 2020 இல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.
அந்த வாய்ப்புகளில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் 2020 டிசம்பர் மாதம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்றின் காரணமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்த கல்லூரிக்கு வர இயலாத சூழ்நிலை இருந்தது.
மாணவர்களுக்கு சிறப்பு சலுகை
இதன் காரணமாக சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், அந்த வாய்ப்பில் தேர்வுக் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்களுக்கும், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் பருவத்தேர்வுகளின் போது மட்டும் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிறப்பு வாய்ப்பு அடிப்படையில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் வைத்துள்ள நிலுவைப் பாடங்கள் அனைத்திற்கும் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், அவர்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு மட்டும் தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு தாளிற்கு தேர்வுக் கட்டணமாக 65 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு சிறப்பு வாய்ப்பிற்கும் பதிவுக் கட்டணமாக 750 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு