சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் (TN School Reopen) இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இதற்காக போக்குவரத்து துறையும் மாணவர்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளது. இதற்காக 1500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலின் படி, 'ஜூன் 9, 2023 அன்று வார இறுதி நாட்கள் மற்றும் ஜூன் 12 அன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 12 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்க இருப்பது மற்றும் இந்த வார இறுதி நாட்களான இன்று முதல் 11 ஆம் தேதி வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது' என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்த பிறகு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. எனினும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்ததால் மறுபடியும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசிக்கட்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து