சென்னை: சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட முன்னணி செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து வரும் வீரா், வீராங்கனைகள் சென்னை விமானநிலையம் வந்து, அங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தங்க வைக்கப்பட உள்ளர். அதேபோல போட்டிகள் முடிந்து, நாடு திரும்பும் போதும் சென்னை விமானநிலையம் வழியாகவே செல்லவிருக்கின்றனர்.
அத்துடன் போட்டிகளைக் காண ஏராளமான வெளிநாட்டு பார்வையாளர்களும் வருகை தர வாய்ப்பு உள்ளதால், சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள் சிரமம் இல்லாமல் விமான நிலைய சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற, உரிய வசதிகள் செய்யப்படுகின்றன.
அதற்காக குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளன. அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் நேற்று (ஜூன் 3) சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அலுவலர்கள், குடியுரிமை அலுவலர்கள், சுங்கத் துறை அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டர்கள் அமைப்பது, எவ்வாறு சிக்கல்கள் எதிர்கொள்வது, விரைவாக வெளியேற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி; தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து