கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிகை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்புகுழு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, “கரோனா பாதிப்புகளை சரி செய்ய முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றார். கரோனா தொடர்பானப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வீடு வீடாக ஆய்வு செய்து, கரோனா வைரஸ் தொற்று குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.
காவல்துறை, மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து, மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டுவருகின்றது. ரேசன் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் தொண்டு நிறுவனங்களோ, தனி நபர்களோ மக்களுக்கு உணவு வழங்குவதால், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த உணவுக்கு தேவையானவற்றை அரசிடம் கொடுத்தால் அவர்கள் பெயரிலேயே அத்தியாவசியப் பொருள்கள், இல்லாமல் இருக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு