சென்னை: அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் எம்சி ராஜா தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை காவல் கண்காணிப்பாளராக இருக்கும் தில்லை நடராஜன் என்பவர், தனக்கு சொந்தம் என கூறி ஆக்கிரமித்து வைத்திருந்ததாக, அப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்னர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது பொதுமக்களை குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, சர்ச்சைக்குரிய சாலையை இறுதி உத்தரவு வரும் வரை அதிலிருக்கும் தடைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால் மண்டலம் 7 மற்றும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள், அந்த சர்ச்சைக்குரிய சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மற்றும் கழிவுகளை தாங்களாகவே தூய்மைப்படுத்த முயன்றுள்ளனர்.
அப்போது காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன், மகள்கள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மகள்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் மனைவி ஆகியோர் பொதுமக்கள் மீது செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேநேரம் மாடியில் இருந்து பூந்தொட்டிகளை பொதுமக்கள் மீது வீசி எறிந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் படி நடந்து கொண்டுள்ளனர். இதில் பெண் மற்றும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் கண் விழித்த பெண்மணிக்கு காந்திருந்த ஷாக்