பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், ”எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, திருப்திகரமாக செயல்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைவில் அவர் பூரண குணம் பெற்று திரும்புவார் எனவும் அவரது மகன் எஸ்.பி. சரண் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாம் கட்டமாக 100 வென்டிலேட்டர்கள் வழங்கிய அமெரிக்கா!