கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்தாண்டு நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டு குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இரண்டாவது அலை காரணமாக சற்றுக் குறைக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் தற்போது தொற்று குறைவதால் மீண்டும் அதிகரிக்கப்படுகிறது.
ரயில்கள் வழக்கமான பெயர்களில் இயக்கப்படாததாலும், அவ்வப்போது ரத்து செய்யப்படுவதாலும், நீட்டிக்கப்படுவதாலும் ரயில்களின் இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இணையதள வசதியில்லாத மக்களுக்கு ரயில்கள் இயக்கம் பற்றி முழுமையாக அறிய முடியாத சூழல் நிலவுகிறது.
இதனைப் போக்கும் வகையில், தென்னக ரயில்வே சார்பாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய, சூழலில் தென்னக ரயில்வே சார்பாக 376 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை இந்த மாத இறுதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இவை குறுகிய காலத்தில் ரத்து செய்யப்படவோ, மாற்றியமைக்கவோ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது பயணத்துக்கு முன்பாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், அருகில் உள்ள ரயில் நிலையத்தில் சென்று தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகளின் வசதிக்காக இயங்கும் சிறப்பு ரயில்கள்!