சென்னை: புதிய விமான நிலைய முனையம், வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக ஓபிஎஸ்க்கு நேரம் வழங்கப்படாது என்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இறுதியாக பல்லாவரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி மாலை 7:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். 7:30 மணியில் இருந்து 8:15 வரை பார்வையாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட சில தினங்களில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.மேலும், அமித்ஷாவின் கருத்துக்கு அவரை தொலைபேசி மூலமாக அழைத்த எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
அப்போது அமித்ஷா, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்துகள் கூறியதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட 3 இடங்கள் பாஜகவிடம் ஈபிஎஸ் தரப்பினர் கேட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தில் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.
இதில், ஒரு நிமிடம் மட்டுமே ஓபிஎஸ்க்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாகவும், பாஜகவின் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும், சமீப காலமாக அதிமுக - பாஜக மோதல் தொடர்பாகவும் பிரதமருடன் அண்ணாமலை ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யார் வரவேற்பை ஏற்றுக்கொள்வார்?