சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். தனது மாஸ் படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராக வலம் வருபவர். இப்படி தமிழ் சினிமா மார்க்கெட்டை வேறு தளத்திற்கு கொண்டு செல்பவர். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளர் ஆக இருந்து மக்கள் இயக்கத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் தற்போது இதுகுறித்து தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான அளவில் வெற்றிகளை பெற்றுள்ளனர். இது விஜய்க்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. உடனே வெற்றி பெற்றவர்களை வரவழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பல்வேறு பணிகளை கொடுத்துள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விஜய் மக்கள்(vijay makkal iyakkam) மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த தகவல்களை சேகரித்து தலைமைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் வழிகாட்டுதலின்படி புஸ்ஸி ஆனந்த் இதனை வழங்கியுள்ளார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவரவர் தொகுதியின் முக்கிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதியில் உள்ள 10 முக்கிய பகுதிகள், தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் பெயர் மற்றும் தொழில். தொகுதியில் இரண்டு நபர்கள் நியமிக்க பெயர் மற்றும் தொடர்பு விபரங்கள்.
மொத்த பூத் எண்ணிக்கை. பூத் உறுப்பினர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா ? அணி தலைவர் பெயர் மற்றும் பொறுப்பு. எத்தனை வார்டுகளில் நிர்வாகிகள் செயலாளர், பொருளாளர், இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதி விவரங்கள் தொகுதியின் பெயர், மொத்த வாக்காளர் எண்ணிக்கை, ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், அதிக வாக்கு எண்ணிக்கை கொண்ட பிரிவினர், கடந்த ஐந்து முறை தேர்தலில் வென்ற வேட்பாளர். வென்ற கட்சி, வெற்றி பெற்ற ஆண்டுகள், பெற்ற வாக்குகள் தொகுதி இட ஒதுக்கீடு பிரிவு, வேட்பாளர் சார்ந்த பிரிவு உள்ளிட்ட விபரங்கள் அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தினரை வேட்பாளராக நிறுத்த விஜய் திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஒரு அமமுக சேர்மனை தட்டிக் தூக்கிய ஈபிஎஸ்.. டிடிவி தினகரன் அப்செட்!