தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மே 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து, ஜுன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் இன்று(ஜுன்.10) காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படமாட்டாது எனத் தெரிகிறது.
புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.