தமிழ்நாடு முழுவதும் முக்கிய திருத்தலங்களில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 27ஆம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று கோலாகலமாக டைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில், சூரபத்மன் என்னும் அரக்கனை முருகன் அழித்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வே, ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி என்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கந்த சஷ்டித் திருநாளான நேற்று, திருச்செந்தூர் மட்டுமின்றி பல முருகன் கோவில்களிலும் இந்த சூரசம்ஹார விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, வடபழனி முருகன் கோயிலில் சூரசம்கார விழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்கார விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். இதனையடுத்து மரக்கட்டையால் செய்யப்பட்ட அசுரன் பொம்மையை முருகன் தனது வேலால் குத்தி வீழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
முருகனின் 7ஆவது படைவீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் சூரசம்கார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முருகனுக்கு16 வகைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோயிலிலும் சூரசம்கார விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: சூரபத்மனை வதம் செய்த முருகபெருமான் - திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!