சென்னை: திமுக மகளிரணி சார்பில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்.14) காலை முதலே சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தொடர்ந்து முக்கிய முடிவுகளை குறித்து ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய ஆலோசனை: கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் இன்று முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்தனர். இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து சோனியா காந்தி சென்னை வந்துள்ள நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இட ஒதுக்கீடு விவகாரங்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு முக்கிய கூட்டமாக பார்க்கப்பட்டாலும், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?