சென்னை, அயனாவரம் நாகேஷ்வர குருசாமி தெருவைச் சேர்ந்தவர் சுபைதா பீவி (63). இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஐந்து ஆண், மூன்று பெண் என மொத்தம் எட்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில், ஆறு பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்று தனியாக வசித்துவருகின்றனர். தாய் சுபைதா பீவியும், மகன் அப்துல் ரஹீமும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனியாக வசித்துவந்தனர்.
அப்துல் ரஹீம் மது பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மதுபோதையில் அப்துல் ரஹீம் தாய் சுபைதா பீவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அப்துல் ரஹீம் தான் மறைத்துவைத்திருந்த சுமார் 1/2 அடி நீளமுள்ள கத்தியை எடுத்து நெஞ்சில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த சுபைதா பீவியின் அலறல் குரலைக் கேட்ட வீட்டின் உரிமையாளர் அன்சாரி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இறந்துகிடந்தார்.
இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அயனாவரம் காவல் துறையினர் சுபைதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிந்து அப்துல் ரஹீமை கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அப்துல் ரஹீம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தீவிரமாக அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட சிறுவன்: கடப்பாவில் மீட்பு!