சென்னை: நாடு முழுவதும் அண்மைக்காலமாக வித்தியாசமான முறையில் மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இன்ஃபுளுயன்சா(Influenza) வைரஸ் H3N2 என்ற பெயரிலான அந்த வைரஸ் காரணமாக மர்மக் காய்ச்சல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இந்திய மருத்துவச் சங்கம் (Indian Medical Association) தங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், "தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான நோயாளிகள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு இருமல், தும்மல், சளி, வாந்தி, பேதி, தொண்டையில் புண், உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன.
பொதுவாக ஏற்படும் காய்ச்சலானது சில நாட்களில் குணமாகிவிடும். பருவ காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது H3N2 வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள இந்த காய்ச்சலால் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மர்ம காய்ச்சல் கண்டவர்களுக்கு உடல் வலி மிக அதிக அளவில் இருக்கும் மற்றும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும். இவ்வாறு அறிகுறிகள் உடன் வரும் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை மட்டும் அளித்து தேவைக்கேற்ற மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். பெரும்பாலான நோய் எதிர்ப்பு மாத்திரைகள், மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் நோயைத் தவிர்க்கக் கும்பலாகக் கூடுவது கைகுலுக்குவது போன்ற பல்வேறு செயல்களைத் தவிர்க்க வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல தவிர்க்கப்பட வேண்டிய ஆண்டிபாடி மருந்து, மாத்திரைகள் விவரத்தையும் அந்த சுற்றறிக்கையில் ஐ.எம்.ஏ பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த சுற்றறிக்கை இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் இடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முரளிதரன் மற்றும் அங்கத்தினர்கள் பெயர்கள் மட்டுமே உள்ளன. அதில் யாரும் கையெழுத்துப் போடவில்லை. அதேபோல அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாள் என்ன, பெறுதல் முகவரி என்ன என்ற விவரங்கள் இல்லை.
-
Fever cases on rise - Avoid Antibiotics pic.twitter.com/WYvXX70iho
— Indian Medical Association (@IMAIndiaOrg) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fever cases on rise - Avoid Antibiotics pic.twitter.com/WYvXX70iho
— Indian Medical Association (@IMAIndiaOrg) March 3, 2023Fever cases on rise - Avoid Antibiotics pic.twitter.com/WYvXX70iho
— Indian Medical Association (@IMAIndiaOrg) March 3, 2023
இந்த சுற்றறிக்கையானது டிவிட்டர் பக்கம் வாயிலாக அனைத்து மருத்துவர்களுக்கும் சென்று சேரும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவைப் படித்த நூற்றுக்கு 90 சதவீத டாக்டர்கள் தங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். ஐஎம்ஏ நிறுவனத்தை டாக்டர்கள் தங்கள் வார்த்தைகளால் வறுத்து எடுத்துப் பதிவுகளைப் பதிவு செய்து கொண்டே வருகின்றனர்.
இதில் சில மருத்துவர்கள் கையெழுத்தே இல்லாத சுற்றறிக்கையைப் போட்டது யார்? இது அரசு அறிவிப்பா இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? டிவிட்டர் என்ன அரசின் அதிகார தளமா? இந்த டிவிட்டர் பதிவைப் பாமர மக்கள் எப்படிப் படிப்பார்கள்? இந்த நோயின் தாக்கம் குறித்து அவர்களுக்கு எப்படி விளக்குவது? இதையெல்லாம் பதிவு செய்யாமல் மொட்டையாக மருத்துவர்களுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளை எழுத வேண்டாம் என்று குறிப்பிடுவது ஏன்?, அப்போ மருத்துவர்கள் படிக்காமல் வருகிறார்களா? சோதனை செய்யாமல் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளைப் பரிந்துரை செய்கிறார்களா? எந்த பார்வையில் இந்த பதிவுகளை ஐஎம்ஏ செய்கிறது என மருத்துவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பி வருகின்றனர்.
இதில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சில மருத்துவர்கள் ஐ.எம்.ஏ கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐ.எம்.ஏவுக்கும் மருத்துவர்களுக்கும் இன்புளுயன்ஸா வைரஸ் தொடர்பாகக் கருத்து மோதல் உள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இதுகுறித்து எவ்வித பதிலையும் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். மத்திய சுகாதார ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் இதுவரை மர்மக் காய்ச்சல் தொடர்பாக எவ்வித செய்திக் குறிப்போ, பொதுமக்களுக்கான எச்சரிக்கையோ, விழிப்புணர்வு கருத்துக்களோ வெளியிடப்படவே இல்லை. அதே நேரம் தமிழக அரசு சார்பில் ஆயிரம் இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎம்ஏ சங்க சுற்றறிக்கை, மருத்துவர்களின் கருத்து மோதல் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் பாரமுகம் போன்ற பல்வேறு குழப்பங்களால் இன்ஃபுளுவென்சா வைரஸ் குறித்து மக்களுக்கு எவ்வித தகவலுமே இதுவரை சென்றடையவில்லை என்ற நிலையில் நோயின் தாக்குதல் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
இதையும் படிகள்: Women's day: சுங்கச்சாவடியில் கெத்து காட்டும் இளம்பெண்கள்!