சென்னை: மெரினா கடற்கரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலில் குளிப்பவர்களை காப்பாற்ற மட்டுமே காவலர்கள், மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து உயிர்காக்கும் பிரிவு என்று தொடங்கப்பட்டது. இருப்பினும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் கடலில் அதிக ஆழம் உள்ள பகுதிகளில் குளிப்பவர்களை முன்னதாகவே தடுப்பதற்காக, தற்போது போலீசார் புது முயற்சியில் இறங்கி உள்ளனர். மெரினா கடற்கரை மணலில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த போலீஸ் பூத்துகள் இரவு நேரங்களில் வண்ணவிளக்குடன் காட்சியளிக்கும்.
இரவு நேரங்களில் கடலில் குளிப்பவர்களை தடுக்கும் நோக்கிலும், காணாமல் போன குழந்தைகளை மீட்பதிலும் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் இந்த போலீஸ் பூத் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்