இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சௌந்தரராஜபெருமாள் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதையும் நிலவு பூமியைச் சுற்றிவரும் பாதையும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.
இந்த வெட்டும் இடங்களில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, பௌணர்மியோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் நிகழும். நிலவு சூரியனைவிட மிகவும் சிறியது எனினும், அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவைவிட புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமார் 400 மடங்கு அதிகம்.
அதேபோல், நிலவின் விட்டத்தை விட சூரியனின் விட்டமும் சுமார் 400 மடங்கு அதிகம். எனவேதான் சூரியனும் நிலவும் வானில் ஒரே அளவு கொண்டது போல் தோன்றுகின்றன. இதனால்தான் முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கின்றது. நிலவு புவியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. இதனால் புவிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 3,57,200 கி.மீ. முதல் 4,07,100 கி.மீ. வரை மாறுபடுகிறது.
பூமியிலிருந்து நிலவு வெகுதொலைவில் இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம் (அல்லது வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளியில் தெரியும். எனவே இதனை கங்கண சூரிய கிரகணம் என்கிறோம்.
அதுபோன்ற ஒரு கங்கண சூரிய கிரகணம் 2020 ஜூன் 21ஆம் தேதி நிகழவுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்னர் 2010 ஜனவரி 15ஆம் தேதியும், 2019 டிசம்பர் 26ஆம் தேதியும் கங்கண சூரிய கிரகணத்தைப் பாரக்க முடிந்தது. வரும் ஜூன் 21 அன்று ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற கங்கண சூரிய கிரகணத்தைக் காணலாம்.
21 ஜூன் நிகழவுள்ள கங்கண சூரியகிரகணம் சீனாவின் தென் பகுதி , மத்திய ஆப்பிரிக்கா, சவுதி, வட இந்தியா ஆகிய பகுதிகளில் தெரியும். தமிழ்நாட்டில் இந்நிகழ்வு பகுதி சூரிய கிரகணமாக சென்னை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் தெரியும். சென்னையில் கிரகணம் காலை 10.22 மணிக்குத் தொடங்கி நண்பகல் 1.41 மணிக்கு முடியும். அதிகபட்ச கிரகணம் காலை 11.58 மணிக்கு நிகழும்.
இந்நிகழ்வின்போது, சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. கங்கண கிரகணத்தின்போதும் பார்க்கக் கூடாது சூரியனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமோ அல்லது எந்த உருப்பெருக்கு கருவியைக் கொண்டோ சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் கண் பார்வையை இழக்க நேரிடும்.
சூரியனைக் காண எளிய ஒரு வழி, சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்து பார்ப்பதாகும். ஒரு சிறிய 5 மில்லிமீட்டர் அளவிலான துளையை ஒரு அட்டையில் ஏற்படுத்தி, அதன் வழியே ஒரு கண்ணாடியின் உதவி கொண்டு சூரிய ஒளியைப் பாய்ச்சினால் அட்டையின் மறுபக்கத்தில் சற்று தூரத்தில் சூரியனின் பிம்பம் உருவாகும். அங்கு ஒரு வெண்ணிற அட்டையைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தைக் காணலாம்.
வெல்டிங் வைக்கப் பயன்படுத்தும் 14ஆம் எண் ஒளி வடிகட்டி கொண்டும் சூரியனைக் காணலாம். எனினும் ஒளிவடிகட்டிகளில் கீறல்களோ, துளைகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சூரிய கிரகணம் நிகழ்வுக்குப் பின்பு கரோனா வைரஸ் பாதிப்பில் மாற்றமும் நிகழும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொது ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம்