சென்னை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர். இதையே 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்கிறார் திருவள்ளுவர். கரோனா கால ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகளை வேடிக்கை பார்க்கும் ஆதரவற்றோர், ஒரு பிடி சோறுக்காக ஏங்கித் தவிக்கின்றனர்.
அன்றாட உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் இவர்களுக்கு சில சமூக அமைப்புகள் தான் ஆதரவுக் கரம் நீட்டுகிறது. சென்னை முழுவதும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு 'உதவிடத்தான் பிறந்தோம்’ என்ற குழு சார்பில் மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்வே நிலையம்,பெருங்களத்தூர், பல்லாவரம் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோரை தேடிச் சென்று, அவர்களின் பசியைத் தீர்த்து வருகின்றனர். அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 'உதவிடத்தான் பிறந்தோம்' குழுவினர், இந்தப் பணியினைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.
"வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்" என்ற வள்ளலாரின் வரிகளுக்கு ஏற்ப இவர்கள், ஆற்றும் சேவை பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.