தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் இன்று (நவ.25) நள்ளிரவோ அல்லது நாளை (நவ.26) அதிகாலையோ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் எஸ்.என்.பிரதான் வெளியிட்டுள்ள வீடியோவில், "தற்போதைய தகவலின்படி, நிவர் புயலானது முன்பு கணிக்கப்பட்டதைவிட சற்று தாமதமாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தகவின்படி நாளை (நவ.26) அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்கிறோம்.
இது அதிதீவிர புயல் என்பதால் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 130 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து, கடந்த 48 மணி நேரமாக களத்தில் பணியாற்றி வருகின்றன. தற்போது வந்திருக்கும் தகவலின்படி தமிழ்நாடு முழுதும் மாநில அரசுடன் இணைந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஒரு லட்சம் மக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளது. அதேபோல பாண்டிசேரியிலும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேரை வெளியேற்றியுள்ளோம்.
மத்திய, மாநில அரசுகளின் குழுக்களுக்கு இடையே மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. களத்தில் இருக்கும் நிலைமை குறித்து அமைச்சரவை செலரும் உள் துறை செயலரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மையத்தில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், அங்கிருக்கும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாலும் ஆபத்தான பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாலும் புயலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். மேலும், புயலுக்குப் பின் இருக்கும் சூழலை சமாளிக்க ஏதுவாக படகுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தயாராக வைத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல்: சிறப்பு ரயில்கள் ரத்து!