ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்கள் பலர் மத்திய அரசின் மீட்பு விமானங்களில் தாயகம் திரும்புவதற்குப் பயணச்சீட்டு எடுக்க பணம் இல்லாமல் தவிக்கின்றனா். இதனை சா்வதேச தங்கம் கடத்தும் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனா்.
பயணச்சீட்டு எடுக்க இயலாத இந்தியா்களுக்கு இலவச விமான டிக்கெட்கள் எடுத்துக்கொடுத்து, அதற்கு கைமாறாக கடத்தல் தங்கத்தைக் கொடுத்து அனுப்புவதாக ரகசிய தகவல்கள் சென்னை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு (DRI) கிடைத்தது.
இதற்காக, தங்கக் கட்டிகளை சிறு, சிறு துண்டுகளாக நொறுக்கி (அ) பவுடராக அரைத்து தங்க பேஸ்ட்களாக மாற்றி ஆசனவாயிலும், உள்ளாடைகளுக்குள்ளும் மறைத்துவைத்து எடுத்துவருவதாகவும் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஐந்து போ் நேற்று மாலையிலிருந்து, இன்று காலை வரை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்து முகாமிட்டுத் தங்கினா்.
அவா்களுக்குச் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் உதவியாக இருந்தனா். நேற்றிரவிலிருந்து இன்று காலை வரை சென்னை வந்த மூன்று மீட்பு விமான பயணிகளைச் சோதனையிட்டனா். துபாயிலிருந்து வந்த விமானங்களில் வந்த பயணிகளைச் சோதனையிட்டபோது, அதில் ஒன்பது பயணிகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவா்களைத் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் மூன்று பேருடைய ஆசனவாய், உள்ளாடைகள், காலில் அணிந்திருந்த ஷு, சாக்ஸ்களில் மறைத்துவைத்திருந்த 2.88 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பயணிகளை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சா்வதேச மதிப்பு ரூ.1.32 கோடியாகும்.
![பறிமுதல் முதல் செய்யப்பட்ட தங்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-gold-smuggling-visual-script-7208368_12102020174603_1210f_1602504963_463.jpg)
இந்தத் தங்கத்தைப் பயணிகளிடம் கொடுத்தனுப்பியது யார் என்பது குறித்தும், சென்னையில் இத்தங்கத்தை வாங்கவிருந்த ஆசாமிகள் யாா்? என்றும் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: மீட்பு விமானங்களில் தொடரும் தங்க கடத்தல் - ரூ.1.64 கோடி மதிப்பிலான 3.15 கிலோ பறிமுதல்!