துபாய் ஏா்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 189 இந்திய பயணிகளையும் சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது, ஆந்திரா, சென்னையைச் சோ்ந்த நான்கு பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனியறைகளுக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்கள் உள்ளாடைகளுக்குள் 1.2 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
அதேபோல், இன்று காலை ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டையைச் சோ்ந்த ஐந்து மீட்பு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில், தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டதில், உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனா்.
விமான சீட்டில் தங்கம் கடத்தல்
சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மற்றொரு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்கிய பின்னர், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஏா்இந்தியா ஊழியா்கள் ஈடுபட்டனா். அப்போது விமானத்தின் உள்ளே ஒரு சீட் வழக்கத்திற்கு மாறாக, தூக்கிக்கொண்டு உயரமாக இருந்தது. இதையடுத்து ஊழியா்கள் அந்த சீட்டை கத்தியால் கிழித்து சோதனையிட்டனர்.
அதற்குள் ஒரு பார்சல் இருந்தது. இதையடுத்து அதில் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டதால், வெடிகுண்டு நிபுணா்கள் விமானத்திற்குள் வந்து சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து, பாதுகாப்பு அலுவலர்கள் பாா்சலை பிரித்து பாா்த்தனா். அதனுள் 1.1 கிலோ தங்கம் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து தங்கத்தை சுங்கத்துறையிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனா்.
துபாயிலிருந்து மீட்பு விமானங்களில் சென்னை வந்தவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.1.64 கோடி மதிப்பிலான 3.15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக ஒன்பது போ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தங்கம் என நினைத்து 100 சவரன் கவரிங் நகைகளை கொள்ளையடித்த கும்பல்!