சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், பெரிய அளவில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, சுங்க அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மலேசிய நாட்டு தலைநகர், கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.13) வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதித்தனர். அப்போது, மலேசிய நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரின், உடைமைகளை சோதித்த போது, அவருடைய பையில் துளையிடும் ட்ரில்லிங் மெஷின் (Drilling Machine) ஒன்று இருந்தது.
சந்தேகத்தில் அதை கழற்றிப் பார்த்தபோது, அதனுள் 3 தங்க உருளைகள் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 3.49 கிலோ கொண்ட இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.88 கோடி. இதை அடுத்து, சுங்க அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, மலேசியா நாட்டை சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்தனர்.
இதேபோல, குவைத் நாட்டில் இருந்து அபுதாபி வழியாக ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்த போது, சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதித்த போது, தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 4.93 கி எடையுள்ள சர்வதேச அளவில் ரூ.2.67 கோடி மதிப்புடைய தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த சென்னையை சேர்ந்த பயணியை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் மலேசியா, குவைத் நாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த, மலேசிய நாட்டுப் பயணி உட்பட இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 4.55 கிலோ எடை உடைய ரூ.8.42 கோடி மதிப்புடைய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எண்ணூரும், எண்ணெய் கசிவும்.. பாதிப்புக்கு உள்ளாகும் பல்லுயிரினங்கள்!