சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக, விமான நிலைய சுங்க அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம்செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாகுசான் பாரே (37) என்பவரை சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் அவர் மறைத்துவைத்து கடத்திவந்த 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.
இதேபோன்று, துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த சீனி இப்ராகிம் (49), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ரிபாயூதீன் (35) ஆகியோரை விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சோதனையிட்டதில், 32 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 782 கிராம் தங்கத்தை அவர்களிடமிருந்து சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
இதேபோன்று, அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த, திருச்சியைச் சேர்ந்த ஹிக்கமுத்துல்லா (48) என்பவரிடமிருந்து 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 457 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினர்.
மேலும், சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்த, இலங்கையைச் சேர்ந்த சசிகா ரூபிணி (49), வசந்தி (46) ஆகியோரின் உடமைகளைப் பரிசோதனையிட்டதில், அவர்கள் கடத்தவிருந்த 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்துள்ள சுங்கத்துறை அலுவலர்கள், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு