கரோனா தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டதால்,அதனை நம்பி இருக்கும் நடைபாதை சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வருவாய் இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வரும் 7ஆம் தேதி முதல் வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், சென்னையின் முக்கிய போக்குவரத்து வசதியான புறநகர் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. பூட்டிக்கிடக்கும் நிலையங்களால் ரயில்வே துறைக்கு மட்டுமின்றி அதனை நம்பி வாழும் ஏராளமான சிறு வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாம்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே பழ வியாபாரம் செய்யும் கீதா பேசுகையில், "முன்பு நாளொன்றுக்கு 5,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும், தற்போது ஆயிரம் ரூபாய்க்குகூட வியாபாரம் நடைபெறவில்லை. ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டாலும் பழைய வியாபாரம் நடைபெறாது. பேருந்தில் ஒரு நாளைக்கு நான்கு பேர்தான் வருகிறார்கள். மக்களுக்கு வேலை இல்லை, கையில் பணப்புழக்கம் இல்லை. இதனால் வியாபாரம் சீராக ஜனவரி மாதம் ஆகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
மற்றொரு வியாபாரி சுந்தரம் பேசும்போது, " ஆறு மாதமாக உணவுக்கு வழியின்றி தவித்தோம். அரசின் இலவச ரேஷன் வாங்கிதான் உணவருந்தினோம். வியாபாரிகளுக்கு இரண்டு முறை ஆயிரம் ரூபாய் தருகிறோம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எங்களுக்கு அந்தப் பணம் வந்து சேரவில்லை. வியாபாரிகளுக்கான மாநகராட்சி அடையாள அட்டை வைத்திருக்கிறேன்.
அரசின் உதவித்தொகை கோரி இரண்டு முறை விண்ணப்பித்தும் இதுவரை அந்தப் பணம் வந்து சேரவில்லை. அதேபோல், பிரதமர் நிவாரண நிதியும் வந்து சேரவில்லை. வியாபாரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் வெளியில் கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மீண்டும் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டால்தான் வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பும். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தற்பொழுது ரயில் நிலையத்திற்கு அருகே வியாபாரம் இல்லாததால் வீடு வீடாகச் சென்று தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ததால், கைகள் காப்பு காய்த்துபோய் உள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பழங்களை விற்பனை செய்தாலும், கரோனா காரணமாக மக்கள் பழங்களை வாங்க அச்சப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வியாபாரி மகாலட்சுமி கூறுகையில், "மெட்ரோ ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. ஆனால், மின்சார ரயில் இயக்கப்பட்டால்தான் ஏழை, எளிய மக்களுக்கு உதவும். மின்சார ரயில்கள் இயக்கப்பட்டால் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். தற்போது, ஆயிரம் ரூபாய்கூட கிடைக்கவில்லை, மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டால்தான் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை, எளிய மக்கள் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கரோனாவால் உயிர் இழப்பதை விட பட்டினியால்தான் உயிரிழக்கப் போகிறோம்" என்றார் கலக்கத்துடன்.
சிறுவயது முதலே மாம்பலம் ரயில் நிலையம் அருகே வியாபாரம் செய்து வரும் அயுப்கான் பேசுகையில், "இதுவரை இதுபோன்ற சூழ்நிலை பார்த்ததே இல்லை. தற்பொழுது, நாளொன்றுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரைதான் வியாபாரம் நடக்கிறது. முன்பு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும். முன்பு 500 ரூபாய் சம்பளம் வழங்கினார்கள். தற்போது 350 ரூபாய் தான் தருகிறார்கள். ஊரடங்கு சமயத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவருந்தி காலத்தைக் கழித்தேன்" என்றார்.
பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்த நடைபாதை வியாபாரிகள் இது போன்ற ஒரு சூழ்நிலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை, இனி எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் வரவில்லை என்கிறார்கள். மீண்டும் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டால் இவர்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு சீரடையும் என்றாலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு அரசு உதவித்தொகை அளித்து அவர்களின் கையில் பணம் புழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: சிறு வியாபாரிகளுக்கு இடத்தை ஒதுக்க மறுக்கும் சி.எம்.டி.ஏ.; நீதிமன்றத்தை நாட வியாபாரிகள் முடிவு