சென்னை: மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயனளிக்கும் வகையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு ஸ்காட்ச் விருது வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனித்தனியே விருதுகள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி நாடு முழுவதும் இருக்கும் அரசுத்துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான ஸ்காட்ச் விருதுக்காக ஸ்காட்ச் குரூப் நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், சென்னை காவல்துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களான, சாலையோரங்களில் ஆதரவற்றோர் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பராமரிக்கப்பட்டு வரும் காவல் கரங்கள் திட்டம், மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கும் சிற்பி திட்டம், பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலைபடுத்தி வாழும் பயிற்சி திட்டமான ஆனந்தம், தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டமான மகிழ்ச்சி, காவலர்கள் எளிதில் விடுப்பு வழங்கும் திட்டமான காவலர் விடுப்பு செயலி ஆகியவை முன் மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஸ்காட்ச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த விருதிற்காக 320க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியில் பங்கு கொண்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தனர். அனைத்து செயல் திட்டங்கள் குறித்து சென்னை காவல்துறை சார்பாக அவர்களிடம் விரிவாக விளக்கப்பட்டது.
பொதுமக்கள் சார்பாக இணைய வழி முறையில் ஓட்டு அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் வாக்களித்தனர். இதில் அரை இறுதி சுற்றுக்கு சென்னை காவல்துறையின் திட்டங்களான காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் order of merit 2022 விருது கிடைக்கப்பட்டது.
மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் 66,148 வாக்குகள் பெற்று சென்னை காவல்துறையின் "காவல் கரங்கள்" திட்டம் முதலிடத்தை பிடித்து, police & safety 2022ஆம் ஆண்டுக்கான ஸ்காட்ச் தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது. உயரிய விருதாக கருதப்படும் ஸ்காட்ச் விருதை பெற்ற காவல் கரங்கள் குழுவினருக்கு சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தியதால் குற்றம் குறைந்த காரணத்திற்காகவும், இ செலான் மிஷின் அறிமுகப்படுத்திய காரணத்திற்காகவும் சென்னை காவல்துறை இரண்டு ஸ்காட்ச் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கோயம்பேட்டில் பெண் பத்திரிகையாளருக்கு கசப்பான அனுபவம்