சென்னை: சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே உள்ள காரணை நேரு தெருவில், பிப்ரவரி 13 அன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் வீடுகளில் புகுந்து திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை விரட்டி உள்ளனர். அப்போது அந்த நபர் கற்களைக் கொண்டும், காலி பாட்டில்களைக் கொண்டும் பொதுமக்களைத் தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், அந்த நபரைப் பிடித்துத் தாக்கி உள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த தாழம்பூர் காவல் துறையினர், பலத்த காயம் அடைந்த அந்த நபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (பிப்.14) அதிகாலை அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருட வந்து பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கேசத்ர மோகன் பரமன் (43) என்பது தெரிய வந்துள்ளது. அவர் தாழம்பூரில் நடைபெறும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்காகப் பதிவு செய்த தாழம்பூர் காவல் துறையினர், காரணை நேரு தெருவைச் சேர்ந்த பார்காரர் ஆனந்த் (32), ஓட்டுநர் ராஜா (28), ஊராட்சி பணியாளர் உதயசங்கர் (37), கொத்தனார் தொழில் செய்து வரும் விக்னேஷ் (29), பாலமுருகன் (33) மற்றும் ரமேஷ் (28) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குக் காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: யாருகிட்ட காசு கேக்குற.? ஆட்டோ ஓட்டுநரை இரும்புக்கம்பியால் தாக்கிய வடமாநில இளைஞர்!