சென்னை: 18 வயதுக்கு கீழ் உள்ளோர் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(ஏப்ரல் 12) இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காவலாளிகள் உடனடியாக சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது, மணலி காவல் நிலையத்தில் உட்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் கைதான 18 வயது சிறுவன் ஒருவன், கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த இரண்டாம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்துவிட்டு, மீதமுள்ள அனைத்து அறைகளையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பியோடிய ஆறு சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறார்கள் தப்பிச் சென்றதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தப்பிச்சென்ற 6 சிறார்களில் மூவர் கோயம்பேடு பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவர்களை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மீதமுள்ள மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வேலூர், காஞ்சிபுரம், நெல்லை என அடுத்தடுத்து அரசு இல்லம், சீர்திருத்த பள்ளிகளில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு சிறுவர், சிறுமியர் தப்பிச்செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி