சென்னை: கேளம்பாக்கம் சுசில் ஹரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் 2 போக்சோ வழக்குகள் உட்பட 3 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 3வது வழக்கும் போக்சோ வழக்காக மாற்றப்பட்டது.
பறிமுதல்
அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷ்மிதா என்ற நடன ஆசிரியை கடந்த ஜூன் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவரது அறையில் இருந்து லேப்டாப் கணினி சி.பி.யூ உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்தகட்டமாக அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 5 பெண் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
பெண் ஆசிரியர்களிடம் விசாரணை
அதன் அடிப்படையில் தீபா, கருணா, நீரஜா, திவ்யா ஆகிய 4 ஆசிரியைகளும் இன்று சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தினை அளித்து வருகின்றனர். பாரதி என்ற ஒரு ஆசிரியை வெளிநாட்டில் வசித்து வருவதால் முதலில் 4 பேரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.
ஏற்கனவே சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு ஏற்பட்டு 2 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியைகளிடம் பெறப்படும் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தமிழை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - வைகோ குற்றச்சாட்டு