செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்தப் பள்ளியை நடத்திவருகிறார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் அடுக்கடுக்காகப் பாலியல் புகார்களை முன்வைத்தனர். அந்தப் புகாரின்பேரில், நேரில் முன்னிலையாகுமாறு சிவசங்கர் பாபா உள்ளிட்டோருக்குக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.
ஆனால் சிவசங்கர் பாபா முன்னிலையாகாமல் நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்டில் உள்ள டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, டேராடூன் சென்ற சிபிசிஐடி தனிப்படை காவல் துறை சிவசங்கர் பாபாவை தீவிரமாகத் தேடிவந்த நிலையில் அவரை டெல்லி காசியாபாத்தில் கைதுசெய்தனர்.
தொடர்ந்து, அவர் டெல்லி சாதேத் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்கு இரவோடு, இரவாக டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்தனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.