சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தாமதமாக புகார் அளிக்கப்பட்டது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் புகாரளிக்க வேண்டுமென்ற சட்ட விதிகள் புகார்தாரருக்கு தெரிந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார்தாரரின் விளக்கத்தை கேட்காமல் சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கட்கிழமை (அக் 31) விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ட்விட்டரின் அதிகாரப்பூர்வ தலைவரானார் எலான் மஸ்க் - பராக் அகர்வால் நீக்கம்