சென்னை: காவலர் முதல் உயர் அலுவலர்கள் வரை விருப்பத்தின் காரணமாகவும், சில நிர்வாக வசதிக்காகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றது. குறிப்பாக காவல் துறைத் தலைமை அலுவலகத்திலிருந்து பணியிட மாறுதல் உத்தரவானது சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால் இந்த உத்தரவு வந்தவுடன் காவலர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை முறையாக விதிகளைப் பின்பற்றி, முன்னதாகப் பணிபுரிந்த இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் மூலம் விடுவிக்கப்படாமல், பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் உடனடியாகச் சேர்வதில்லை எனக் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு கடிந்துகொண்டுள்ளார்.
இந்தப் பணியிட மாறுதல் உத்தரவை தலைமை அலுவலகத்தில் மட்டும் அல்லாது, மண்டல, சரக அலுவலர்கள் மூலம் பிறப்பிக்கப்படும்போதும், முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே காவலர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை பணியிட மாறுதல் உத்தரவு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலர் பணியிட மாறுதல் பெற்ற காவலர்களை உடனடியாக விடுவித்து, பணியிட மாறுதல் கிடைக்கப்பெற்ற இடத்தில் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட காவலர் பணியில் சேர வேண்டும் என உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தவறும்பட்சத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஒருவேளை பணியிட மாறுதல் பெற்ற காவலர், மாற முடியாத சூழல் ஏற்பட்டால் அதற்குண்டான காரணத்தையும் காவல் துறைத் தலைமை அலுவலகத்திற்கு ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்