சென்னை, திருவொற்றியூரில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அகாதெமி விளையாட்டு சங்கம் சார்பில் தொடுமுறை சிலம்பப் போட்டி நடைபெற்றது.
சென்னை, ஈரோடு, சீர்காழி உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலம்ப வீரர்கள் வந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
மைக்கு ஏற்ப பாயிண்டுகள்
இது குறித்து இந்த அமைப்பின் நிறுவனர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”பாரம்பரிய முறைப்படி வீரத்தை வெளிப்படுத்தும் முறையில் அந்தக் காலத்தில் சிலம்பத்தின் முகப்பில் சுண்ணாம்பு அல்லது மை வைத்திருப்பார்கள். எதிரியின் மீது எத்தனை மை வைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப பாயிண்டுகள் வழங்கி விருதுகள் வழங்கப்படும்.
தற்போது நவீன முறைப்படி சிவப்பு நீல கலர்கள் சிலம்பு கம்பத்தில் பூசப்படுகின்றன. பாதுகாப்பாக வீரர்கள் களத்தில் இறக்கப்படுகின்றனர். எதிராளி மீது எத்தனை மை அடையாளங்கள் வைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப அவர்களுக்கு பாயிண்ட்கள் வழங்கப்படும்.
இதற்காக 14 முதல் 16 வயது உள்ள மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டு இன்று (ஆக.08) போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் பரிசாக 10,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 5000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2500 ரூபாய், நான்கு பேருக்கு ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சிலம்பாட்டக் கலைக்கு தற்போது மிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் பலர் மிக ஆர்வமாக இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றனர். தகுதியான திறமையான வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் தற்போது கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டியை தொழிலதிபர் ஆர்.சி.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி கணேசன், டாக்டர் ராஜ்குமார், ஏ.சி.எல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை