சென்னை மாநகராட்சி சார்பில், 50 கோடி ரூபாய் செலவில் நடை பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் அவற்றைச் சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி, சென்னையைச்சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடைகள், வாகனங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் நடைபாதையில் மின்சார இணைப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதைகளை சரியாகப் பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி கடைநிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் வைத்திருப்பதாக வேதனைத் தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு