சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு நேரடி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெகதீசன். இவர் இன்று காலை அயனவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் வழக்கு சம்பந்தமாக உதவி ஆய்வாளர் ஜெகதீசனிடம் விளக்கங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பட்டாபிராம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவலர்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து இருவரும் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பட்டாபிராம் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை மாநகர மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, உதவி ஆய்வாளர் ஜெகதீசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வழக்கறிஞர், உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதலில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.