கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் முதல் அனைத்து நிறுவனங்களையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இ-பாஸ் ரத்து, அரசு மற்றும் தனியார் போக்குவரத்து அனுமதி, அனைத்து கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. வணிக வளாகங்கள், கோயில்கள் திறக்க தமிழ்நாடு அரசு பல நெறிமுறைகளை வகுத்தது. அதனடிப்படையில், கடந்த ஐந்து மாதங்களாக மூடிக்கிடந்த வணிக வளாகங்கள் தற்போது திறக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம்செய்ய கிருமிநாசினி இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தலைமை பாதுகாப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது, "ஐந்து மாதத்திற்கு பிறகு வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தோம். தொடர்ந்து கிருமிநாசினி தெளித்து வருகிறோம், வணிக வளாக ஊழியர்களுக்கு பாதுகாப்பு பற்றி பல்வேறு வகுப்புகளை நடத்தியுள்ளோம்.
வளாகத்திற்குள் வருவதற்கு முன் நான்கு சக்கர வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கிறோம். கடைகளுக்கு உள்ளே ஆடை சோதனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். முடிந்தளவு மின்னணு பண பரிமாற்றத்தை பின்பற்ற அறிவுறுத்திள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வார்டில் நோயாளிகள் உற்சாக நடனம்!