தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடையை பள்ளிக்கல்வித்துறை மாற்றியது. அதேபோல் மாணவர்களுக்கு காலணிகள் கடந்த 2012- 13 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டு ஷூ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு உள்ள ஈர்ப்பு மற்றும் அவர்களின் சீருடையும் காரணமாக அமைகிறது. எனவே தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஷூ வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்தது.
இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலணிகள் கடந்த 2012-13ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. அதனை மாற்றி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதனை செயல்படுத்தும் வகையில் 2020 -21 ம் கல்வி ஆண்டு முதல் காலணிகளுக்குப் பதிலாக ஷூ,சாக்ஸ் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஜோடி ஷூ மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை’ - கனிமொழி எம்.பி.