சென்னை: கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் திரைப்படம் 'இராவண கோட்டம்'. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், நடிகர் சாந்தனு கடந்த இரண்டு வருடங்களாக, Netflix இல் 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சாந்தனு
தற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது. இராவண கோட்டம் அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படம். லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தையும் முன்னணி இயக்குநருமான பாக்யராஜ், சாந்தனு நண்பர்களுடன் இணைந்து இராவண கோட்டம் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் நடிகர் சாந்தனு 'இராவண கோட்டம்' படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். சாந்தனு நடிப்பில் 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் 'கசட தபற' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை SonyLIV தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெற்ற ஜெயம் ரவி!