சென்னை: காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் மற்றும் ICAT Design & Media College சார்பில், மெரினா காந்தி சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் அணையர் பிரதீப் குமார், நிர்வாகப் பிரிவு கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர்கள் லலிதா குமாரி, செந்தில் குமாரி, போக்குவரத்து துணை ஆணையர் ஓம் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஐந்து நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
புதிய திட்டம்
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “21ஆம் தேதி தொடங்கிய இந்த வீர வணக்க நாள், அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைகிறது. மாநகரக் காவல் துறையில் பணியாற்றி உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவுறுத்தியபடி காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க சென்னை மாநகரில் அனுமதி அளித்துள்ளது. மேலும் தீபாவளி அன்று சொந்த ஊருக்குச் செல்லும் மக்களிடம் தனியார் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தால், புகார்கள் வரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்பவர்கள் தங்களின் வீடுகள் தொடர்பான தகவல்களை காவல் நிலையத்தில் அளித்தால் அந்த வீடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும் செல்போன் செயலி மூலமாகவே பண்டிகை காலங்களிலோ அல்லது வேறு ஏதேனும் அவசரத்திற்கோ வெளியூர் சென்றால் தங்களுடைய வீட்டைப் பாதுகாக்க காவலர் மூலம் கண்காணிக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தத் திட்டம் சென்னை மாநகரக் காவல் துறையால் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை எம்ஜிஆர் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சீதாலட்சுமி என்பவரை நகை பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்துள்ளார்கள். கொலை செய்தவர்களைப் பிடிக்க தனிப்படை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்