சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பேசிய முத்தரசன், '1952 தேர்தலில் ஐக்கிய முன்னணி கூட்டணி அமைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கின்ற சூழல் உருவாகியபோது சில சூழ்ச்சிகள் செய்து கொல்லைப்புறமாக ராஜாஜி முதல்வாரானர். கொல்லைப்புறமாக வந்திருந்தாலும் ராஜாஜி நேர்மையானவர். எதையும் வெளிப்படையாக கூறுபவர். "கம்யூனிஸ்ட்தான் என்னுடைய எதிரி" என்று ஒளிவு மறைவின்றி கூறியவர். அதேபோல் குலக்கல்வி திட்டத்தை வெளிப்படையாக வலியுறுத்தியதனால்தான் ராஜாஜி முதல்வர் பதவியை இழந்தார்.
ஆனால், பாஜகவின் கொள்கை வெளிப்படையானதல்ல. கொள்கை என்ன என்பதை கூறாமல் மறைமுகமாக செயல்படும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். தெற்கு ரயில்வேயில் இந்திதான் பேச வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்டவுடன் அலுவலர் அதை ரத்து செய்வதாகக் கூறுகிறார். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மறைமுகமாக மோடி மனுதர்மத்தை திணிக்கப் பார்க்கிறார்.
பாஜக கையில் ஆட்சி என்பது குரங்கு கையில் சிக்கிய பூமாலை போன்றது. அதிலிருந்து தமிழ்நாடு தப்பித்துக் கொண்டது. ஆனால், பாஜக மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்துவிட்டது. மிருக பலம் என்பது கள்ளு குடித்த குரங்கு போல. சாதரணமாகவே குரங்கு எப்படி செயல்படும் என்று தெரியும். அதிலும் கள்ளு குடித்த குரங்கு என்றால் எப்படி செயல்படும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.