சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவரும் இவருடைய மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயார் புகார் அளித்திருந்தார்.
வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர், மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் அந்த மாணவியுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து புகைப்படத்தில் உள்ள நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் விமல் ராஜ் என்றும் கண்டுபிடித்தனர்.
அதைத்தொடர்ந்து, தனிப்படையினர் சேலம் சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை அழைத்துச் சென்ற நபரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். காவல்நிலையத்தில் வைத்து விமல்ராஜிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாணவியிடம் ஃபேஸ்புக் மூலமாக பழகி ஆசை வார்த்தை கூறி சேலத்திற்கு கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதன்பின் விமல்ராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.